Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வெளிநாட்டு சுற்றுலாக்களில் கவனிக்க வேண்டியவை

இன்றைய நிலையில் எத்தகைய வயதினராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இருக்கும் ஆசைகளில் ஒன்று, குறைந்தது வாழ்நாளில் ஒரு தடவையாவது வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுப்பயணம் சென்றுவரவேண்டும் என்பதே!

(google.lk)

தனியாக, நண்பர்களாக, தம்பதியர்களாக, குடும்பமாக எப்படியாயினும் உள்நாட்டில் ஒரு சுற்றுலாவை திட்டமிடுவதும், செலவை கட்டுபடுத்துவதும் குதிரைக் கொம்பாக உள்ளநிலையில், நமக்கு பழக்கமே இல்லாதவிடத்திற்கு திட்டமிட்டுக்கொண்டு செல்வது எப்படி? செலவுகளை கட்டுபடுத்திக்கொள்வது எப்படி?

உண்மையில், உள்நாட்டு சுற்றுலாக்கள் போல, வெளிநாட்டு சுற்றுலாக்களையும் திட்டமிடும்போது, கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுவோமேயானால், குறைந்த செலவில் சிறப்பான சுற்றுலா அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

எங்கே? எப்போது?

எந்த நாட்டுக்கு, எந்த காலப்பகுதியில் போகவேண்டும் என்பதை திட்டமிடுங்கள். காரணம், ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு வகையான நடைமுறைகள் இருக்கும். வெவ்வேறு வகையான பருவகாலங்கள் இருக்கும். அதற்கு ஏற்பவும், நமது செளகரியங்களுக்கு ஏற்பவும் திட்டமிட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். எனவே, எங்கே செல்லப் போகிறோம் என்பதனை முடிவு செய்யமுன்பு, அந்த நாடு, அங்கே உள்ள சுற்றுலாத் தளங்கள் தொடர்பிலும் தேடுதலை நடாத்துங்கள். இது உங்கள் சுற்றுலாவுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

பயணச்சீட்டு + தங்குமிடம்

பெரும்பாலான சுற்றுலாப் பயணங்களில் மிகப்பெரும் செலவினத் தொகையாகவிருப்பது பயணச்சீட்டுக்கான செலவும், தங்குமிடத்திற்கான செலவுமே ஆகும். எனவே, அவற்றில் எப்படி பணத்தினை சேமிக்கலாம் என தீர்மானித்துக்கொள்வது அவசியமாகிறது.

தனியே சுற்றுலா மட்டுமே செல்லப்போவதாக முடிவு செய்திருந்தால், பயணச்சீட்டு விலை குறைவான விமானங்களை (Budget Planes) தேர்வு செய்யுங்கள். காரணம், இத்தகைய பயணச்சீட்டுக்களில் ஆகக்கூடுதலாக 7KG அளவிலான பொருட்களை கொண்டு செல்ல அனுமதிப்பதுடன், பயணத்தின்போது ஆகாரங்கள் எதுவும் பிரத்தியேகமாக வழங்கப்படுவதில்லை. சுற்றுலா செல்லும்போது, ஏதேனும் பொருட்களை வாங்க விரும்பினாலோ அல்லது குடும்பத்தாருடன் செல்வதாக இருந்தாலோ இத்தகைய விமானச்சீட்டை பதிவு செய்வது தொடர்பில் சிந்திப்பது அவசியம். முடிந்தவரை முகவர்களது இணையத்தளத்தையும், விமானசேவை வழங்கும் நிறுவன இணையத்தளத்தையும் பரிசோதித்தே இறுதி முடிவை எடுங்கள். இணையத்தளங்களில் பயணச்சீட்டு விலையை பரிசோதிக்கும்போது, முடிந்தவரை உலாவியில் (Browser) “Incognito Window” என்கிற பகுதியைப் பயன்படுத்துங்கள். இந்த பகுதியின் மூலமாக, நீங்கள் இணையத்தில் உலாவும்போது, உங்கள் தரவுகளைச் சேமிக்க முடியாது. சில சமயங்களில் நீங்கள் ஒரே இணையத்தளத்தில் மீண்டும் மீண்டும் விலைகளை பரிசோதிக்கும்போது, நிறைய தேடுதல் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

விடுதிகள் (hostels) அல்லது பகிர்ந்து தங்கும் அறைகள் கொண்ட வீடுகளை (Shared Rooms) தேர்வு செய்யுங்கள். இவற்றினை கண்டறிய Air bnb , Hostel World போன்ற இணையத்தளங்கள் உள்ளன. (blogspot.com)

அதுபோல வெளிநாடுகளுக்கான நுழைவுச்சீட்டு (VISA) நடைமுறைகளையும் அவதானத்தில் கொள்ளுங்கள். இலங்கை போன்ற நாடுகளிலிருந்து சில நாடுகளுக்கு செல்ல நுழைவுச்சீட்டு நடைமுறை இல்லை. ஆனால், அத்தகைய இடங்களுக்கு பயணச்சீட்டு விலைகூடியதாக இருக்கும். அதுபோல, நுழைவுச்சீட்டு கட்டுப்பாடு உள்ள சில நாடுகளுக்கு பயணச்சீட்டு விலை குறைவானதாக இருக்கும். எனவே, ஒட்டுமொத்த செலவையும் இடங்களை தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ளுங்கள்.

அதுபோல, எங்கே தங்கப் போகிறீர்கள் என்பதனையும் பிரயாணம் ஆரம்பிக்க முதலிலேயே முடிவு செய்துவிடுங்கள். தனியாகவோ, நண்பர்களுடனோ செல்வதாக இருந்தால் விடுதிகள் (hostels) அல்லது பகிர்ந்து தங்கும் அறைகள் கொண்ட வீடுகளை (Shared Rooms) தேர்வு செய்யுங்கள். இவற்றினை கண்டறிய Air bnb , Hostel World போன்ற இணையத்தளங்கள் உள்ளன. சுற்றுலா செல்லும் இடங்களில் வெளியிடங்களிலேயே அதிக நேரத்தை செலவிடுவதனால், தங்குமிடத்துக்கென அதிகம் செலவு செய்யவேண்டிய தேவை ஏற்படுவதில்லை.

எங்கெல்லாம் பயணம்?

சுற்றுலாவின் முக்கிய நோக்கம் என்ன? என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதிகமாக இடங்களை பார்வையிடுவதா? நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதா? பொருட்களை வாங்கி குவிப்பதா? எது என்பது தொடர்பில் சுற்றுலாவை ஆரம்பிக்க முதலே முடிவு செய்துவிடுங்கள். இல்லையெனில், எல்லாவற்றிலும் குழம்பி, இறுதியில் பணநெருக்கடி ஏற்பட்டுத் திட்டமிட்ட இடங்களை பார்வையிட முடியாதநிலை ஏற்பட்டுவிடும்.

(aicstudy.com)

பல்வேறு இடங்களை பார்வையிடுவதுதான் உங்கள் பயணத்தின் நோக்கம் என்றால், பெரும்பாலும் பருவகாலம் தவிர்ந்த காலத்தை தேர்ந்தெடுங்கள். இதன்போது, உங்களுக்கு செலவினம் மிகக்குறைவாக இருக்கும். அதுபோல, சுற்றுலாத் தளங்களும் உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பாதிருக்கும். இதனால் பார்வையிடும் இடங்களை முழுமையாக அனுபவித்து பார்வையிடவும் முடியும்.

அதுபோல, நண்பர்களுடன் கும்மாளமிடவோ, பொருட்களை வாங்கி குவிப்பதற்காகவோ பயணப்படுபவர்களாக இருந்தால், பயணம் ஆரம்பிக்க முதலே எங்கே செல்ல வேண்டும்? எங்கே மலிவாக பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்? ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இது, உங்கள் பயண முறைமையை வினைத்திறனாக வைத்திருக்க உதவுவதுடன், பயண அனுபவம் குழம்பாதிருக்கவும் உதவும்.

நினைவுச் சின்னங்களை தள்ளி வையுங்கள்

சுற்றுலா செல்லும்போது, அந்ததந்த இடங்களில் நினைவுப் பொருட்களை வாங்கிக் குவிப்பது என்பது தவிர்க்க முடியாத மரபாக நம்மிடத்தில் உள்ளது. என்னதான் புகைப்படங்களை எடுத்துக்கொண்டாலும், செல்லும் இடங்களின் நினைவாக பொருட்களை வாங்குவதனை நம்மவர்கள் தவிர்ப்பதில்லை. இதனால்தான் என்னவோ, நினைவுச் சின்னங்களின் விலைகளும் எகிறிப்போய் இருக்கின்றன.

(wordpress.com)

எனவே, இனி பயணங்களின் போது, நினைவுச் சின்னங்களுக்கு விடைகொடுத்துவிட்டு, பயணப்படுகிண்ற இடங்களில் எடுக்கின்ற புகைப்படங்களை கொண்டு அல்லது கிடைக்கின்ற அரிய பொருட்களைக்கொண்டு நீங்களே நினைவுச் சின்னங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது, பயணத்தில் உங்கள் செலவையும், நேரத்தையும் நிறையவே மீதப்படுத்தும்.

செலவில்லா போக்குவரத்து

தெரியாத இடத்துக்கு பயணப்படும்போது, நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று இந்த போக்குவரத்து முறையாகும். விடுதியிலிருந்து எவ்வாறு சுற்றுலாத்தளத்துக்கு செல்வது? செல்லும் வாகனம் பாதுகாப்பானதா? நேரத்தை அதிகம் செலவிடவேண்டிய தேவை ஏற்படுமா? என்கிற அச்சத்திலேயே, பெரும்பாலானவர்கள் பயண வழிகாட்டியுடன் வாகனங்களை முன்பதிவு செய்துகொண்டு அதற்கென பெரும் தொகையை செலவிட்டுவிடுவார்கள்.

இப்பொழுதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், இத்தகைய செலவை இலகுவாக மீதப்படுத்திக்கொள்ளலாம். கூகிள் வரைபட (Google Map) உதவியுடன், எங்கிருந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு எவ்வாறு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. அதுபோல, UBER போன்ற வாகனசேவை வழங்கும் பிரத்தியேக மற்றும் சர்வதேச முகவர்களின் செயலிகள் (Apps) உள்ளமையால், பொதுப் போக்குவரத்து சாதனத்தையும், இவற்றையும் ஒப்பீடு செய்து இலாபமான மற்றும் வினைத்திறனான முறையை தேர்வு செய்துகொள்ள முடியும்.

அதுபோல, போகுமிடமெல்லாம் பயணப்பட சொகுசு வாகனங்களே வேண்டும் என்கிற நிலையை தவிர்த்து, துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். (பயணப்படுகின்ற இடங்களை பொறுத்து இதனை தேர்வு செய்யுங்கள்) இது உங்கள் சுற்றுலாவை உங்களுக்கு ஏற்றவகையில் அனுபவித்துக்கொள்ள ஏதுவாக அமையும்.

(testimonialcollecter.com)

 

தன்னம்பிக்கையுடன் இருங்கள்

தெரியாத இடத்தைத் தெரிந்துகொள்ள சுற்றுலாவை ஆரம்பிக்கும் நீங்கள், அந்த இடங்கள் தொடர்பில் சிறிய தேடுதலை நிச்சயம் கொண்டிருங்கள். அதுபோல, தெரிந்தவர்களிடத்தில் எப்படி நம்பிக்கையாக பேசுவீர்களோ, அதுபோல, தெரியாதவர்களிடத்திலும் நம்பிக்கையுடன் பேசுங்கள். பயணம் முழுவதுமே நீங்கள் நம்பிக்கையுடன் முன்னேற்றிச் செல்ல உதவியாக அமையும்.

அதுபோல, பயணப்படும் இடங்களில் சக பயணிகளுடன், உள்ளூர்வாசிகளுடன் தைரியமாக பேசுங்கள். அவர்களிடமிருந்து பெறுகின்ற தகவலை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டு பயன்படுத்தத் தொடங்குங்கள். பலவேலைகளில், உங்களைவிடவும் மேலதிக தகவல்களை சகபயணிகள் கொண்டிருக்கக்கூடும். அதற்காக, அவர்கள் சொல்லுகின்ற எல்லாவற்றையும் நம்பாமல், உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தொலைபேசி சேவைகள் முதல் பொதுப் பணம் வரை

வேறு ஒரு நாட்டுக்கு செல்லும்போது எவற்றை பற்றி எல்லாம் அறிந்துகொள்ளுகிறோமோ இல்லையோ, தற்காலத்தில் அறிந்துகொள்ளவேண்டிய முதன்மையான விடயம். எந்த தொலைபேசி சேவையை பயன்படுத்துவது என்பதே! முடிந்தவரை விமான நிலையத்திலேயே அந்தந்த நாட்டுக்கான தொலைபேசி வழங்குனர்களை காண முடியும். நீங்கள் குறித்த நாட்டில் செலவிடவுள்ள காலத்திற்கு ஏற்ப மிகச்சிறந்த சலுகைகளுடன் தொடர்பை வழங்கக்கூடியவர்களை தெரிவு செய்துகொள்ளுங்கள். பெரும்பாலும், சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தவென வெவ்வேறு திட்டங்களுடன் முன்பணம் செலுத்தப்பட்ட சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். இல்லையெனில், முன்னரே சென்றுவந்த நண்பர்கள் பயன்படுத்திய சிம் அட்டைகளைக்கூட பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதுபோல, எந்த நாட்டுக்கு செல்வதானாலும் உங்கள் நாட்டு பணத்தினை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க டொலராக மாற்றிக்கொண்டு செல்லுங்கள். எந்தவொரு நாட்டிலும் டொலர் பணத்தினை குறித்த நாட்டு பணமாக மாற்றுவது இலகுவாக இருப்பதுடன். அவற்றினை மாற்றும்போது ஏற்படுகின்ற பணஇழப்பும் ஒப்பீட்டளவில் குறைவானதாகவே இருக்கும். அத்துடன், தேவைக்கு ஏற்றால்போல பணத்தினை மாற்றிக்கொள்ளும்போது, உங்கள் செலவுகளையும் கண்காணித்து குறைத்துக்கொள்ள முடியும். பெரும்பாலும் பணத்தினை வங்கிகளிலும் பார்க்க, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் மாற்றிக்கொள்ளுங்கள். இதன் மூலம், சந்தைப்பெறுமதியிலேயே பணத்தினை மாற்றிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இவற்றை எல்லாம் கவனத்தில்கொண்டு , உங்கள் வெளிநாட்டு சுற்றுலாக்களை எல்லாம் திட்டமிடுவீர்களாக இருந்தால், எந்தவித தடையுமின்றி உங்கள் விடுமுறைக்காலத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றிக்கொள்வீர்கள்.

Related Articles